Thursday, May 12, 2016

Giraffe walk ( ஒட்டகச்சிவிங்கி நடை)

இந்த அழகான ஒட்டகச்சிவிங்கியின்  நடை தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள "க்ருகர் நேஷனல் பார்க்" (Kruger National Park) இல் எடுக்கப்பட்டது.



Saturday, May 7, 2016

துரத்தும் உலகம்


துரத்தும் உலகம்

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"

இந்த வள்ளுவனின் குறள் நமக்குக் கூறும் முக்கிய செய்தி, நாம் வாழ்வில் எந்தத் தரத்தில் இருந்தாலும், நீரின் தேவையின்றி இங்கு யாராலும் உயிர் வாழமுடியாது. ஆனால் நம் ஊர்களின் நிலைமையோ வேறு, நீரில்லாமல்செந்தாமரை பூத்த குளமெல்லாம் மலடாகிவிட்டது, பத்து ரூபாய் பாட்டில் எல்லாம் பழக்கமாகிவிட்டது; பட்டா போட்டும், போடாமலும் பாதி உயிருடன் நீரைத் தேடி தன் நினைவில் நீந்துகிறது ஆடுகளம்போல காட்சியளிக்கும் நம் ஊர் குளங்களும், ஆறுகளும், ஏரிகளும்.  நீருக்கு ஆதாரமே மரங்களும், காடுகளும்தான். நீரின்றி அமையாது உலகு. இது எவ்வளவு உண்மையோ அதற்கு நிதர்சனமான உண்மை "காடின்றி செழிக்காது நாடு".

ஆனால், இங்கோ காடுகள் அனைத்தையும் அழித்துவிட்டு, குளங்களை மூடிவிட்டு; கம்பி கோபுரங்களையும், மாடி வீடுகளையும், மாளிகைபோன்ற புதுப்புது கோவில்களையும், கட்டி வைத்து அழகு பார்க்கிறோம்.

வனவாழ் உயிரினங்களில் பல, இன்று பாட புத்தகத்தில் மட்டுமே பார்க்கமுடிகிறது;

கூடுகட்டி  வாழும் உயிரினங்களில் பலவற்றை இன்று கூண்டோடு ஒழித்து விட்டோம்;

பறக்கும் பட்டாம் பூச்சிக்கும், தாவும் தவளைகளுக்கும் கூட சுடுகாடாகவே மாறிவிட்டது நம் ஊரில் உள்ள பல சாலைகள்;

நம் எத்தனைப் பேருக்கு தெரியும், நாம் குடித்துவிட்டு போடும் குளிர்பான தகரக் கிண்ணங்களிலும், தேநீர், குழம்பி அருந்திய காகித கோப்பைகளிலும், தொன்னைகளிலும் மீதம் இருக்கும் அந்தச் செயற்கை சர்க்கரை கலந்த பானங்களால் தினமும் பல லட்சக்கணக்கான தேனீக்கள் ஈர்க்கப்பட்டு, அதனை அருந்தியபின் தேனீக்களின் மூளையின் நினைவாற்றல் முற்றிலுமாக செயல் இழந்து, தன் தேன் கூட்டிற்கு செல்லும் வழியை மறந்து இறுதியில் இறந்தே விடுகின்றன.

பீ மூவீ(Bee Movieஎன்ற இந்த ஆங்கில கார்டூன் படம் நமக்கு விளக்கும் செய்தி ஒன்று தான், தேனீக்கள் அழிவின் இறுதியில் உலகின் உள்ள எல்லா தாவரங்களின் மகரந்த சேர்க்கைகளும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்தேவிடும் நிலை, மீதி கதையை நான் இங்கு விளக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்தப் பூமியில் எப்போது தேனீக்கள் காணாமல் போகிறதோ, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து மனிதர்களும் காணாமல் போய்விடுவார்கள் என்று கணக்கிட்டுகூறும் அறிவியல் அறிஞர்களின் வார்த்தைகள் நமக்கு தேனீக்கள் மற்றும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் அனைத்து உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இப்படி மனிதன் செய்கின்ற சிறு சிறு பிழைகளினால், அறிவியல் கூறும் உணவு சங்கிலியில் ஒவ்வொன்றாக அழியத் தொடங்கிவிட்ட இந்த நிலையில், மற்றும் ஒரு பேராபத்தைத் தெரிந்தே ஆதரிக்கிறோம். இன்று பணப்புழக்கத்தையெல்லாம் தோற்கடித்துவிட்டது  இந்த   பாலிதீன் எனப்படும் நெகிழி பழக்கம். கையில் துணிப்பைக் கொண்டு கடைவீதிக்குச் செல்லும் அந்த இயற்கைவாசியை கேலி செய்வதை விட்டுவிட்டு, ஏதோ ஒரு வழியில் அவன் இயற்கைநேயத்தோடு நம் பூமியை காக்கத் தொடங்கிவிட்டான் என்று நினைத்துக் கொண்டு, நாமும் அவனை பின்தொடருவோம்.

கட்டிய கோவில்களும், கோபுரங்களும் போதும், மரம் விடும் வேர்களுக்கும் கொஞ்சம் இனியாவது இடம் கொடுப்போம்”.

ஏனென்றால், இந்த பூமியில் “இயற்கையைக் காக்கும் காப்பகம்” இதுவென்று  தனியாக ஒரு இடம் நமக்கு கிடையாது.

இந்த துரத்தும் உலகத்தில் தொலைந்துபோன டைனாஸர் போன்ற பல உயிரினங்களுக்கு மத்தியில் தொலையும் தருவாயில் தன் உயிருக்காகப் போராடும் பட்டாம்பூச்சிகள், தவளைகள், தேனீக்கள், பறவைகள் என்று மனிதன் போடும் இந்த அட்டவணையில் கடைசி பெயராய் அவனும் சேரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. உலகம் உனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால், இந்த துரத்தும் உலகம் உன்னையும் தூக்கிப் போட்டுவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்.

இங்கு மேற்குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வையும் சேர்த்தே நாம் இனிமேல் சுவாசிப்போம்.

இயற்கைநேயதோடு

தி.வி. சதிஸ் சுந்தர்

Wednesday, April 13, 2016

2016 - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


பரிச்சயமான ஒரு பாரதியார் பாடல்





20-01-2016 தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் "சமூக பேரிழிவு" என்ற தலைப்பில் படித்து தெரிந்து கொண்டேன், தன் இறுதி சடங்கை செய்வதற்காக சுடுகாட்டிற்கு வழி கேட்ட அந்த முதியவர் ஒருவரின் உடலுக்கு சாதியின் பேரில் நேர்ந்த கொடுமையை, இது நடந்தேறிய இடம் திரு நாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

2016 இல் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாம் செய்யவேண்டிய பணி நிறைய உள்ளது என்ற சிந்தனையில் தான் நாம் எல்லோரும் இந்த ஆண்டை தொடங்கினோம். ஆனால், மேற்குறிப்பிட்டது போல் மனதை பாதிக்கும் மனிதத்தன்மையற்ற செயல்  நம் ஊரில் அடிக்கடி அரங்கேறி பல அவலங்களுக்கு ஆதாரமாய் நிற்கும் போது மனம் அதை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு வேலை உணவை கூட எடுக்க கை தடுமாறுகிறது. இந்த சாதி எனும் கொடுஞ்செயலை அழித்தெறிய ஒரு வழியை தேடி தவிக்கும் பல குரல்களின் தொகுப்பாக தான் இதை இங்கு சமர்பிக்கிறேன்.

தேடுகிறேன்
தேடுகிறேன் உன்னை; ஆமாம் எங்கள் உள்ளம் படும் இந்த வேதனையை உருவாக்கியவன் அல்லவா நீ; உன்னை பார்த்து எங்கள் கேள்விக்கு பதில்  கேட்கவேண்டும்.

எங்கள் உடம்பில் ஓடும் இரத்தத் அணுக்களில் உள்ள நிறத்திலும் வேற்றுமை இல்லை, அதன் வேகத்திலும் வேற்றுமை இல்லை; இதயததுடிப்பின் எண்ணிகைகள் கூட சரியாகத்தான் உள்ளது. இப்படி பல, எங்களுடைய கண், கை, கால் போன்ற எல்லா உறுப்புகளிலும் ஒற்றுமையை தந்துவிட்டு எங்கிருந்து கண்டு பிடித்து கொண்டு வந்தாய், எங்களை பிரிப்பதற்காக இந்த சாதி எனும் உறுப்பை.

உடனே, எங்கள் உடம்பில், கட்டாயமாக செய்யவேண்டும் ஒரு அறுவை சிகிச்சை. இது சாதி எனும் உறுப்பை அறுத்தெரிய மட்டும் அல்ல; அந்த சாதி எங்கள் மனதில் உண்டாக்கிய புற்றுநோயிலிருந்து எழுந்து, விழிப்புற்று வாழ்வதற்கும்.

ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது எனும் பழமொழியை எனக்கு உணரவைத்த தருணம் ஒன்று. ஆம், நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது நன்கு பரிச்சயமான ஒரு பாரதியார் பாடல்;

“சாதிகள் இல்லையடி பாப்பா”

இதை படித்த அனைவரும் இங்கு அரங்கேற்றும் செய்வது இதற்கு முற்றிலும் முரண்படான செயலை தான். ஆம், எங்கு பார்த்தாலும் சாதியின் அடிப்படையில், அதை பின்பற்றிய சடங்குகள், நம் சமூகத்தில் மட்டும் தான் இப்படி நடக்கிறதா என்றாள் இல்லை, இதை நமக்கு கற்றுக்கொடுத்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டிலும், நம் உறவினர்கள் வீட்டிலும், ஏன் நம் தாய் தந்தை மனத்திலும் கூட இதே செயல் தான் நடைமுறையில் உள்ளது.

இறுதியில் நாம் கற்றது ஒன்று தான்; இங்கு அனைவரும் படிப்பது ஒன்று செய்வது வேறொன்று.

இந்த முரண்பாடான செயல்களை சமுதாயத்தில் படரவிட்ட கயவனை கண்டுபிடிக்க வேண்டியே தேடுகிறேன் என்ற தலைப்பில் எழுத தொடங்கினேன். ஆனால் மேற்கண்ட இதிலிருந்து ஒரு செய்தி மட்டும் தெளிவாகவே புரிகிறது, அவன் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கமுடியாது, அப்படி பதில் கிடைத்தாலும் அதை வைத்து கொண்டு இங்கு நடக்கும் அவலங்களுக்கு நம்மால் முற்றிலும் தீர்வு காணமுடியாது.

இருந்தாலும் பரவாயில்லை தேடுகிறேன் தலைப்பிலேயே தொடருகிறேன்.  ஏனெனில், இங்கு எனது தேடல் முழுவதும் பலகோடி மக்களின் மனதிலும், வாழ்விலும் சங்கடங்களை தோற்றுவித்த இந்த சாதியை முற்றிலும் அழிக்கும் வழியை தேடியே...!!!

***************

உயர்வான உயரம்

மனிதனே நீ எப்போது உயர்வாய் என்று தெரியுமா;
என்றாவது எண்ணி பார்த்ததுண்டா?

உன் பெற்றோர் கொடுத்த பிறப்பினாலா? இல்லை

உனக்கு சர்க்கார் கொடுத்த சான்றிதழின் பேரிலா? இல்லவே இல்லை!!!

ஒரு நாள், உனக்கு இந்த சமுதாயம் ஒரு பெரிய வெகுமதியை கொடுக்கும். ஆனால் அதை உன்னால் ஒரே நாளில் பெறமுடியாது, உன் செயலுக்காகவும், உன் குணதிர்காகவும் இந்த வெகுமதி உன்னை தேடியே வரும்.

அதை பெற்றதில் பெருமிதம் கொள்ளாமல், மக்கள் உனக்கு கொடுத்த இந்த வெகுமதியை,

"நான்கு திசைகளிலும் இருந்து வரும் காற்றிடம், எப்படி  ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை பாதுகாப்பாயோ, அதைப்போல உன் வாழ்நாள் முழுவதும் நீ பாதுகாக்க வேண்டும்"

அப்போது தான் நீ உயர்ந்தவனாவாய்.

உன் இறப்பிற்கு பிறகும்கூட அழியா புகழுடன் நீ உயர்ந்துகொண்டே இருப்பாய். அதன் பிறகு உன்னுடைய இந்த உயரத்தை பாதுகாக்க யாரும் மதில் சுவர்கூட அமைக்க தேவையில்லை, மதம் கொண்ட யானைகள் மட்டும் அல்ல, மதம் பிடித்த மனிதப் படைகளும்கூட உன் புகழ் பாட தொடங்கிவிடும்.

உயர பறந்திடுவோம் உச்சியை தொடுவதற்கு அல்ல
நம் உயரத்தை வளர்த்திட.

இதுவே உயரம்
உண்மையான உயர்வான உயரம்.
***************

நட்பு எனும் வாள்(ழ்)

இருளை போக்க அதிகாலையில் உதயமாகும் சூரிய ஒளியை போல இந்த சாதி எனும் சொல்லை களைத்தெறிய, அதன் உணர்ச்சிகளை செயலிழக்க செய்ய, மற்றும் நம் சமுதாயத்தில் இந்த சாதி உண்டாக்கிய பெரும் தழும்புகளை அடியோடு மறைய செய்வதற்குகாகவே ஒரு வழியை தேடி கண்டு பிடித்து விட்டது எனது மனம்.

பீறிட்டு தெறிக்கும் இந்த சாதி எனும் எரிமலையின் தீக்குழம்பைவிட மிக வெப்பமானது இது...!!!

சாதி எனும் பூதத்தை கொன்று, களைத்து, மறைய வைக்கும் திறமை கொண்ட தீ இது...!!!
சாதி எனும் விசப்பாம்பு கடித்த மிருகங்களை மனிதனாக்கும் மகத்துவம்  தெரிந்த மருத்துவம் இது...!!!

வீரபாண்டிய கட்டபொம்மன் கையில் இருக்கும் வாளை ஒத்த கூர்மையுடையது...!!!
உலகில் உள்ள எல்லா உறவுகளும்;

சாதி எனும் கருவேலம் மரத்திற்கு நீர் பாய்ச்சிய போது, அதை வேரோடு வெட்டி வீழ்த்தும் வல்லமை கொண்ட வீர வாள் இது...!!!

சாதி எனும் இரண்டு எழுத்தை மூழ்கி சாகடிக்க வந்த மூன்றெழுத்து உறவு தான் இது...!!!

“நட்பு   நட்பு   நட்பு”

நம் சமுதாயத்தில் நட்புக்கும் பஞ்சம் இல்லை,
நண்பர்களுக்கும் பஞ்சம் இல்லை. 

இனியும் தேவையா?

சாதியின் பேரில் ஒரு சமூக பேரிழிவு?

விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் இது...!!!

நட்பு எனும் வாள்(ழ்) எடுத்து அழித்திடுவோம், இந்த சாதி எனும் சொல்லை மனதில் இருந்து மட்டும் அல்ல; பாதியில் புகுத்தப்பட்ட நம் தமிழ் அகராதியில் கூட இனி தேவை இல்லை...!!!
**************

நட்புடன்
தி.வி. சதிஸ் சுந்தர்


Thursday, March 10, 2016

அவதாரம்


நடந்தது
தந்தையின் பணியிடம் குடிகாரனாக அரசு மதுபான கடையில்,
தாயின் சமையல் கலையோ பணக்கார வீட்டின் அடுப்பறையில்,
மகனோ...? படிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பள்ளியரையில்…!!!

நடப்பது
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டார் அப்பா,
மனநிலை மாற்றத்தினால் மருத்துவமனையில் அம்மா,
மருத்துவ செலவிற்கும்; ஒரு வேலை உணவிற்க்கும்
அவன் எடுத்த அவதாரம் தான் இது


"குழந்தை தொழிலாளி


ஆடுகளமாகிய குளம்

அன்று

அலங்கரித்த தெப்பம் சுற்றியதும் இங்கு தான்
நீராடியதும், நீச்சல் கற்றதும் கூட இங்கு தான்
கூட்டமாக வரும் பறவைகள் தன் தாகத்தை தீர்த்ததும் இங்கு தான்
இறங்கினால் மூழ்கிடுவோம் என்ற பயம் வந்ததும் இங்கு தான்.

 



இன்று

ஓடி விளையாடும் கூட்டம் ஒரு பக்கம், மட்டையடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்
ஒரு விளையாடுகளம் போலவே மாறியிருந்தது எங்கள் ஊர் குலம்
தேடிப் பார்த்தும் தெரியவில்லை ஒரு துளி நீர் கூட
வருணனும் வரவில்லை என்றால், இதற்கு வழிகாண ஊர் மக்களுக்கும்
மனம் வரவில்லை போல.

பட்டாபோடாமல் பாதி உயிருடன், நீரை தேடி தன் நினைவில் நீந்துகிறது

ஆடுகளமாகிய எங்கள் ஊர் குளம்.



அன்புடன் - அப்துல் கலாமுக்கு



11-12-13 சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த அப்துல் காலம் ஐயா அவர்களை நேரில் பார்த்த அன்று எழுதியது:

கடவுளை பார்த்த மகிழ்ச்சி எனக்கு;
வாழும் விவேகானந்தரே என்று உங்களை வாழ்த்த தொடங்கி விட்டது என் மனம்.

மண்ணுக்குள் ஒரு சோதனையோட்டம், அதில் சாதனை படைத்தவர் நீங்கள்; இதை அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறந்து இருக்கலாம். ஆனால் எங்கள் இந்திய மண் இந்த சாதனையை என்றுமே தன் நினைவில் வைத்து இருக்கும்.

இந்திய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற உங்கள் வாசகத்தை பலமுறை வாசித்திருக்கிறேன் அதன் பொருளை  உணராமல்; ஆனால் இன்று உங்கள் பேச்சால் உணர்ந்தேன். எங்களுக்காகவே நீங்கள் பலநாட்கள் தூக்கத்தை தொலைத்து கண்டெடுத்த கனவு வாசகம் இதுவென்று.

ஒரு விதையின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், அதை மண்ணில் புதைக்க வேண்டும், இது அனைவருக்கும் தெரிந்தது

இந்த இந்திய நாட்டின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், நல்ல எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும் என்ற சூட்சமத்தை உணர்ந்தவரும் செயலில் செய்து காட்டியவரும் நீங்கள்; இன்று எங்களுக்கு செய்ய தொடங்குங்கள் என்று கற்று கொடுத்தவரும் 
நீங்கள்!

ஒளியாக இருக்கும் உங்கள் எண்ணம், உளியாக இருந்து நம் இந்தியாவிற்கு நல்ல உருவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் உணர்ந்தோம்; கண்டிப்பாக உங்களைப் பின் 
தொடர்வோம்.

என்பத்திரெண்டில் கூட எப்படி உங்களுக்கு மட்டும், இப்படி ஒரு ஆற்றல்; உங்கள் பேச்சை 
கேட்ட பிறகு ஒன்று மட்டும் எங்களுக்கு தெளிவாக தெரிந்தது;


நம் இந்திய குழந்தைகளுக்காகவே பிறந்த குழந்தை நீங்களென்று!” 

Total Pageviews