Thursday, May 12, 2016

Giraffe walk ( ஒட்டகச்சிவிங்கி நடை)

இந்த அழகான ஒட்டகச்சிவிங்கியின்  நடை தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள "க்ருகர் நேஷனல் பார்க்" (Kruger National Park) இல் எடுக்கப்பட்டது.



Saturday, May 7, 2016

துரத்தும் உலகம்


துரத்தும் உலகம்

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"

இந்த வள்ளுவனின் குறள் நமக்குக் கூறும் முக்கிய செய்தி, நாம் வாழ்வில் எந்தத் தரத்தில் இருந்தாலும், நீரின் தேவையின்றி இங்கு யாராலும் உயிர் வாழமுடியாது. ஆனால் நம் ஊர்களின் நிலைமையோ வேறு, நீரில்லாமல்செந்தாமரை பூத்த குளமெல்லாம் மலடாகிவிட்டது, பத்து ரூபாய் பாட்டில் எல்லாம் பழக்கமாகிவிட்டது; பட்டா போட்டும், போடாமலும் பாதி உயிருடன் நீரைத் தேடி தன் நினைவில் நீந்துகிறது ஆடுகளம்போல காட்சியளிக்கும் நம் ஊர் குளங்களும், ஆறுகளும், ஏரிகளும்.  நீருக்கு ஆதாரமே மரங்களும், காடுகளும்தான். நீரின்றி அமையாது உலகு. இது எவ்வளவு உண்மையோ அதற்கு நிதர்சனமான உண்மை "காடின்றி செழிக்காது நாடு".

ஆனால், இங்கோ காடுகள் அனைத்தையும் அழித்துவிட்டு, குளங்களை மூடிவிட்டு; கம்பி கோபுரங்களையும், மாடி வீடுகளையும், மாளிகைபோன்ற புதுப்புது கோவில்களையும், கட்டி வைத்து அழகு பார்க்கிறோம்.

வனவாழ் உயிரினங்களில் பல, இன்று பாட புத்தகத்தில் மட்டுமே பார்க்கமுடிகிறது;

கூடுகட்டி  வாழும் உயிரினங்களில் பலவற்றை இன்று கூண்டோடு ஒழித்து விட்டோம்;

பறக்கும் பட்டாம் பூச்சிக்கும், தாவும் தவளைகளுக்கும் கூட சுடுகாடாகவே மாறிவிட்டது நம் ஊரில் உள்ள பல சாலைகள்;

நம் எத்தனைப் பேருக்கு தெரியும், நாம் குடித்துவிட்டு போடும் குளிர்பான தகரக் கிண்ணங்களிலும், தேநீர், குழம்பி அருந்திய காகித கோப்பைகளிலும், தொன்னைகளிலும் மீதம் இருக்கும் அந்தச் செயற்கை சர்க்கரை கலந்த பானங்களால் தினமும் பல லட்சக்கணக்கான தேனீக்கள் ஈர்க்கப்பட்டு, அதனை அருந்தியபின் தேனீக்களின் மூளையின் நினைவாற்றல் முற்றிலுமாக செயல் இழந்து, தன் தேன் கூட்டிற்கு செல்லும் வழியை மறந்து இறுதியில் இறந்தே விடுகின்றன.

பீ மூவீ(Bee Movieஎன்ற இந்த ஆங்கில கார்டூன் படம் நமக்கு விளக்கும் செய்தி ஒன்று தான், தேனீக்கள் அழிவின் இறுதியில் உலகின் உள்ள எல்லா தாவரங்களின் மகரந்த சேர்க்கைகளும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்தேவிடும் நிலை, மீதி கதையை நான் இங்கு விளக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்தப் பூமியில் எப்போது தேனீக்கள் காணாமல் போகிறதோ, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து மனிதர்களும் காணாமல் போய்விடுவார்கள் என்று கணக்கிட்டுகூறும் அறிவியல் அறிஞர்களின் வார்த்தைகள் நமக்கு தேனீக்கள் மற்றும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் அனைத்து உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இப்படி மனிதன் செய்கின்ற சிறு சிறு பிழைகளினால், அறிவியல் கூறும் உணவு சங்கிலியில் ஒவ்வொன்றாக அழியத் தொடங்கிவிட்ட இந்த நிலையில், மற்றும் ஒரு பேராபத்தைத் தெரிந்தே ஆதரிக்கிறோம். இன்று பணப்புழக்கத்தையெல்லாம் தோற்கடித்துவிட்டது  இந்த   பாலிதீன் எனப்படும் நெகிழி பழக்கம். கையில் துணிப்பைக் கொண்டு கடைவீதிக்குச் செல்லும் அந்த இயற்கைவாசியை கேலி செய்வதை விட்டுவிட்டு, ஏதோ ஒரு வழியில் அவன் இயற்கைநேயத்தோடு நம் பூமியை காக்கத் தொடங்கிவிட்டான் என்று நினைத்துக் கொண்டு, நாமும் அவனை பின்தொடருவோம்.

கட்டிய கோவில்களும், கோபுரங்களும் போதும், மரம் விடும் வேர்களுக்கும் கொஞ்சம் இனியாவது இடம் கொடுப்போம்”.

ஏனென்றால், இந்த பூமியில் “இயற்கையைக் காக்கும் காப்பகம்” இதுவென்று  தனியாக ஒரு இடம் நமக்கு கிடையாது.

இந்த துரத்தும் உலகத்தில் தொலைந்துபோன டைனாஸர் போன்ற பல உயிரினங்களுக்கு மத்தியில் தொலையும் தருவாயில் தன் உயிருக்காகப் போராடும் பட்டாம்பூச்சிகள், தவளைகள், தேனீக்கள், பறவைகள் என்று மனிதன் போடும் இந்த அட்டவணையில் கடைசி பெயராய் அவனும் சேரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. உலகம் உனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால், இந்த துரத்தும் உலகம் உன்னையும் தூக்கிப் போட்டுவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்.

இங்கு மேற்குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வையும் சேர்த்தே நாம் இனிமேல் சுவாசிப்போம்.

இயற்கைநேயதோடு

தி.வி. சதிஸ் சுந்தர்

Total Pageviews